துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ஆடைக்குள் மறைத்து ₹86 லட்சம் தங்கம் கடத்தல்: பெண் பயணி கைது

மீனம்பாக்கம்: துபாயில் இருந்து  சென்னை வந்த  விமானத்தில், ஆடை காலர் மடிப்புக்குள் ₹86 லட்சம் மதிப்புள்ள  2 கிலோ தங்கபசையை மறைத்து கடத்தி வந்த  பெண் கைது செய்யப்பட்டார். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறியபடி கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்.  இதனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த இளம் பெண்ணின் உடமைகளை சோதனையிட்டனர். சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில்  பிளாஸ்டிக் பவுச் ஒன்று இருந்தது. அதை திறந்தபோது அதற்குள் தங்கப்பசை  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து  பெண் சுங்க அதிகாரிகள், பெண்ணை  தனி அறைக்கு அழைத்து சென்று உடல் முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது அவர் அணிந்திருந்த ஆடையின் காலர் மடிப்புக்குள்  தங்கபசை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து  2 கிலோ தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ₹86 லட்சம். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: