குப்பைகள் குவிந்த இடத்தில் பூத்து குலுங்கும் மலர்கள்; சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அசத்தும் ஆற்றூர் பேரூராட்சி: முன் மாதிரியாக செயல்படும் பல்நோக்கு தற்சார்பு குடில்

குலசேகரம்: சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பதால், பூமி வெப்பமயமாவதுடன் தட்பவெப்ப சூழ்நிலையும் மாறி வருகிறது. இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்த மனிதன் நவீன அறிவியல் வளர்ச்சியால் செயற்கை உலகத்திற்கு மாறி விட்டான். இதுவே இன்று பூமியின் அழிவுக்கு வழி வகுக்கிறது. ஒவ்வொரு நாளும் மனிதர்களால் பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் கழிவுகள் வேறு கோணத்தில் மனிதனின் உயிருக்கே ஆபத்தாக வந்து நிற்கின்றன. இதனால் மனித இனத்தை காப்பாற்றும் வகையில் பூமியை வெப்ப மயமாவதில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தி எல்லா தரப்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மரம் நடுவோம் மழை பெறுவோம். பிளாஸ்டிக்கை தவிர்ப்போம். பூமியை பாதுகாப்போம் என்ற வாசகங்கள் எல்லா திசைகளில் இருந்தும் ஒலிக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், அதன் பாதுகாப்பு அவசியம் குறித்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளதோடு, மஞ்சப்பை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையடுத்து பல்வேறு இடங்களில் அரசு மேற்கொண்டு வரும் இந்த விழிப்புணர்வை மக்கள் இன்னும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. அபராதத்திற்கு பயந்து பிளாஸ்டிக் பைகளை வணிகர்கள் ஒதுக்கி வைத்தாலும், வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை கேட்கும் அவல நிலை இன்னும் தொடர் கதையாகவே உள்ளது. நாம் வாழுகிற இந்த பூமி அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் முதலில் ஏற்பட வேண்டும். அடி மட்டத்திலிருந்து இந்த விழிப்புணர்வு வர வேண்டும்.

இதற்கு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து களம் காண வேண்டும். அந்த வகையில் குமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சி பகுதிகள் இன்று பிற பகுதிகளுக்கு முன் மாதிரியாக மாறி சுற்றுச்சூழலை பேணுவதில் முக்கிய பங்கு வகுத்து வருகிறது. ஆற்றூர் பேரூராட்சி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுச்சந்தை என எப்போதும் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இங்கு தினமும் குப்பைகள் அதிகம் குவியும்.

அதோடு சாலையோரங்களில் ஒதுக்குபுறமாக இருக்கும் இடங்களில் சாக்கு பைகளில் கழிவுகளை அடைத்து வீசி சென்று விடுகின்றனர். இதனால் எத்தனை தூய்மை பணிகள் செய்தாலும் தூய்மையை பேண முடிவதில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த பேரூராட்சியின் செயல் அலுவலராக மகேஸ்வரன் பொறுப்பேற்றார். சுத்தமான நகரை உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகளை அலசி ஆராய்ந்து இளைஞர் அமைப்பினர், சமூக ஆர்வலர்களோடு கைகோர்த்து களம் இறங்கினார். முதல்கட்டமாக ஆற்றூர் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி வந்த சாலையோர சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.

அந்த பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தபட்டு பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்களுடன் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தொய்வடைந்திருந்த இந்த பணிகள், திமுக ஆட்சி வந்த பின், மீண்டும் விறுவிறுப்படைந்தது. சாலையோரம் குப்பைமேடுகளாக காட்சியளித்த பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டு சிறிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. இவைகளுக்கு மஞ்சப்பை பூங்கா என பெயர் சூட்டப்பட்டது. இவ்வாறு குப்பைகள் கொட்டுகிற இடங்கள் எல்லாம் பூங்காக்களாக மாறியதால் தெருமுனைகளில் குப்பைகள் கொட்டுவது நின்று போனது.

அடுத்ததாக ஆற்றூர் பேரூராட்சி பகுதி முழுவதும் சாலையோரங்களில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு தற்போது வரை சுமார் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை தினசரி பணிக்கு வரும் தூய்மை பணியாளர்கள் பராமரிக்கிறார்கள். தற்சார்பு முறையில் சுற்றுச்சூழல் பேண வேண்டும் என்பதன் அவசியம் தொடர்பாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆற்றூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தற்சார்பு குடில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான மின்சாரம், சோலார் பேனல் தகடுகள் மூலம் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது.

 உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், சாணம் போன்றவற்றை பயன்படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மழை நீரை சேகரித்து தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அருகிலேயே வீட்டு தோட்டம், மாடிதோட்டம் போன்றவற்றை விளக்கும் வகையில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வேண்டாமென்று தூக்கியெறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய ஹெல்மெட்டுகள் போன்ற உபயோகமற்ற பொருட்களின் மீது வர்ணம் பூசி அவைகளில் செடிகள் நட்டு அலுவலக பகுதியை அழகுபடுத்தி உள்ளனர்.

பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் இதனை பார்த்து தங்களின் வீடுகளிலும் தற்சார்பு முறைகளை கையாண்டு இயற்கையோடு சேர்ந்து பயணிக்கும் சூழலை ஏற்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த விழிப்புணர்வு எல்லா பகுதிகளிலும் இதே போன்று அடி மட்டத்திலிருந்து துவங்கும் போது மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதுடன், பூமிக்கு எதிரியான கழிவுகளை ஆங்காங்கே தூக்கி வீசுவதும் கட்டுப்படுத்தப்படும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

 மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்    

இது குறித்து ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், செயல் அலுவலர் மகேஸ்வரன், துணைத்தலைவர் தங்கவேல் கூறியதாவது: மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், வளம் பெறுவோம் என்ற வாசகங்கள் பெயரளவில் மட்டும் இருக்க கூடாது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது நமது கடமை. இதற்காக ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி மரக்கன்றுகள் நடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டது. இதனை கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். இடத்தின் சூழலுக்கேற்ற வகையில் மரக்கன்றுகள் தேர்வு செய்யப்படுகிறது.

மின் கம்பிகள் செல்லும் இடத்தில் குட்டையான மரக்கன்றுகள் நடப்படுகிறது. பிற இடங்களில் இடத்தின் தன்மைக்கேற்ப செடி வகைகள், மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை செடிகள் நடப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளில் கழிவுகளை உரமாக்கும் திட்டம், கழிவுகளை பயன்படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்தல், சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்துதல், மழை நீரை சேகரிப்பது, வீட்டு தோட்டம், மாடி தோட்டம் அமைத்தல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள. இது எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். வருங்காலங்களில் இதனை அனைத்து பகுதி மக்கள் பின்பற்றும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டும்.

Related Stories: