ஒருநாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே கையிருப்பில் உள்ளது.. அடுத்த 2 மாதங்கள் இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும் : பிரதமர் ரணில் பேச்சு

கொழும்பு : அடுத்த 2 மாதங்கள் இலங்கைக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்ற பின் ரணில் விக்ரமசிங்கே நேற்று முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் கூறுகையில், ‘‘இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. தற்போது . 14 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எரிவாயு கொண்டு வந்த கப்பலுக்கு கூட பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும் மே 18, 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வர உள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க லங்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க பரிந்துரைத்துள்ளேன். இந்த விமான நிறுவனத்தால் ரூ.37,500 கோடி இதுவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனியும் இதை அரசு நடத்தினால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை தாங்க வேண்டியிருக்கும். நான் பிரதமராக பொறுப்பேற்று இருப்பது கத்தியின் மேல் நடப்பதை விட பயங்கரமான சவால் ஆகும். நான் பிரதமர் பதவியை கோரவில்லை. நாடு எதிர்கொண்டு வரும் சவாலான சூழலை பார்த்து அதிபர் இந்த பொறுப்பை ஏற்க அழைப்பு விடுத்தார். அடுத்த 2 மாதங்கள் நமக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும் ’ எனக் கூறினார்.

Related Stories: