மனநிலை பாதித்ததால் விபரீதம் தாயை டிரம்மில் அடைத்து அடக்கம் செய்த மகன்: இறந்த தாயை புதைக்க பணம் இல்லை; போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்

சென்னை: மனநலம் பாதித்த மகன், இறந்துபோன தனது வயதான தாயை புதைக்கவோ, இறுதிச்சடங்கு நடத்தவோ பணமில்லாமல், வீட்டில் இருந்த டிரம்மில் அடைத்து, சிமென்ட் கலவை பூசி அடக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகர் 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி செண்பகம்(86). இவர்களுக்கு பிரபு, முருகன், சுரேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோபால் முதுமை காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்தார்.

திருமணமான பிரபு, முருகன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், தாய் செண்பகத்துடன் சுரேஷ்(52), அவரது மனைவி கெல்சி(46) மற்றும் அவர்களது மகன் சைமன்(18), மகள் சாரா(18) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷுக்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ், தாய், மனைவி மற்றும் குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். மேலும், குடிபோதையில், அவர்களை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கணவனை பிரிந்த கெல்சி தனது மகன், மகளுடன் கடந்த ஏப்ரல் 8ம்தேதி கணவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தற்போது அவர் சென்னையில் பெருங்குடி பகுதியில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று  முன்தினம் காலை சுரேஷின் அண்ணன் பிரபு தனது தாயை பார்க்க வந்துள்ளார். அப்போது சுரேஷ் அவரை வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் பலமுறை முயற்சி செய்தும் வீட்டுக்குள் விடாமல் பிரபுவை அவர் தடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பிரபு நீலாங்கரை காவல் நிலையத்துக்கு சென்று, வீட்டில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அவர்கள் வீட்டுக்கு சென்று, சுரேஷிடம், அவரது தாய் பற்றி தீவிரமாக விசாரித்துள்ளனர்.

அப்போது சுரேஷ், ‘‘உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய், சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் அவரது உடலை டிரம்மில் அடைத்து சிமென்ட் கலவை வைத்து பூசி அடக்கம் செய்து விட்டேன்’ என்று தெரிவித்தார். இதை கேட்டு மகன் பிரபு அதிர்ச்சியில் உறைந்தார். போலீசாரோ கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு நீலாங்கரை உதவி கமிஷனர் சுதர்சன், சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் மகேஷ்குமார் ஆகியோர் விரைந்தனர்.

பின்னர், போலீசார் உதவியுடன் சிமென்ட் கலவை பூசப்பட்ட டிரம்மை உடைத்து செண்பகத்தின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் கூறுகையில், ‘‘பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் செண்பகம் கொலை செய்யப்பட்டாரா அல்லது முதுமை காரணமாக இறந்தாரா என்பது தெரியவரும். எனினும் சாப்பாடு இல்லாத நிலை மற்றும் முதுமை காரணமாக மூதாட்டி இறந்து இருக்கலாம்’’ என்று  கூறினர். இதுபற்றி, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் நீலாங்கரை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: