ரூ.10 லட்சம் வாடகை பாக்கி, 4 கடைகளுக்கு சீல் வைப்பு; மாநகராட்சி நடவடிக்கை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு டிம்லர்ஸ்  சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஐந்து கடைகள் இயங்கி வருகின்றன. பழனி, ஜோதி மற்றும் ராமு உள்ளிட்ட சிலர் 4 கடைகளை மரக்கடைகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் 4 கடைகளுக்கும் சேர்த்து சுமார் 10 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கிவைத்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி கேட்டபோது சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி திருவிக.நகர் மண்டல அலுவலர் உத்தரவின்படி, உதவி வருவாய் அலுவலர் முருகேசன், உரிமம் ஆய்வாளர்கள் யுவராஜ், கோபாலகருஷ்ணன் உள்பட அதிகாரிகள் வந்து 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர். வாடகை பணத்தை கட்டிவிட்டு கடையை திறந்து கொள்ளும்படி நோட்டீஸ் வழங்கியதுடன் அந்த பிரதிகளை கடைகளுக்கு முன்பு ஒட்டிவிட்டு சென்றனர். ‘’மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடைகள் கண்டறியப்பட்டு முறையான வாடகை பாக்கி செலுத்தவில்லை என்றால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’’ என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: