கலசபாக்கம் தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

கலசபாக்கம் : கலசபாக்கம் தாலுகாவில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி நவரை சாகுபடி நெல் விற்பனைக்காக கடந்த ஜனவரி 10ம் தேதி மாவட்டம் முழுக்க 76 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து, விவசாயிகள் நெல் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எலத்தூர், தென் மகாதேவ மங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.தற்போது அப்பகுதிகளில் விவசாயிகள் பலர் அறுவடை செய்து, நெல் கொள்முதல் செய்வதற்கு முன்பு உலர்த்தி வரும் நிலையில் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் மூட்டைகளை வாங்க வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்களின் தலையீடுகள் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் முழுமையாக பயன் பெற முடியவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.தற்போது அறுவடை தொடங்கியுள்ளதால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை வீடுகளிலும், வீதிகளிலும் உலர்த்தி பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கலசபாக்கம் தாலுகாவில் கடந்த பருவத்தைவிட இந்த பருவத்தில் 20 சதவீதம் நெல் கூடுதலாக சாகுபடி செய்துள்ளனர்.இதனால் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும். கலசபாக்கம், பாடகம், கடலாடி, வீரலூர் பகுதியிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்யவும், மேற்கண்ட பகுதியை சேர்ந்த தகுதியுள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை இணையத்தில் பதிவு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களை வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: