புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை கண்டறிய டென்மார்க் குழு தமிழகம் வருகை: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில்  குடிநீர், பாசன மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நிலத்தடி நீரை செறிவூட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை நீர்வளத்துறை செயல்படுத்தி வருகிறது. இதனால், 28 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைவாக உள்ளது. இந்நிலையில், டென்மார்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் நிலத்தடி நீர் இருப்பை கண்டறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டென்மார்க் குழுவினர் வரும் ஜூன் மாதம் தமிழகம் வருகின்றனர். அவர்கள், டென்மார்க் நாட்டின்  T-TEM தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வகையான படிம அமைப்புகளின் இருப்பையும், நிலத்தடி நீர் இருப்பையும் கண்டறிந்து, அதனடிப்படையில் நீர் இருப்பு மற்றும் நீர் செறிவு செய்ய ஏற்ற இடங்களை மேப்பிங் செய்து தருவார்கள். இதன் மூலம், நிலத்தடி நீர் அதிகமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கிருந்து நீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளும் வகையில் இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: