ரூ.550 கோடியில் 7 அணைகளை தூர்வாரும் பணியால் கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட திட்டம்: நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: ரூ.550 கோடியில் 7 அணைகளை தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் மணலை விற்பனை செய்து வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் உள்ளது. இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு என்பது 242 டிஎம்சி ஆகும். இந்த அணைகள் தான் மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அணைகளில், பெரும்பாலான அணைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத நிலையில், அந்த அணைகள் 50 சதவீதம் கொள்ளளவை இழந்து காணப்படுகிறது. இதனால், பருவமழை காலங்களின் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அணைகளில் கொள்ளளவை மீட்கும் பட்சத்தில் முழுமையாக நீரை தேக்கி வைக்க முடியும். எனவே, நீர்வளத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் அணைகளில் மண்படிமங்கள் தொடர்பான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், முதற்கட்டமாக மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வைகை, பவானிசாகர் உட்பட 7 அணைகள் மற்றும் ஒரு ஏரியின் கொள்ளவை மீட்பதற்காக நடவடிக்கை எடுக்க நீர்வளத்துறை திட்டமிட்டது.

இதையடுத்து நீர்வளத்துறை சார்பில் இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 7 அணைகள், ஒரு ஏரியை தூர்வாரும் பணி விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டத்துக்கு ரூ.550 கோடி நிதி தேவைப்படும் என்பதால், இதன் மூலம் அணைகள், ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் மணலை வைத்து வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது’ என்று நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: