போலி பத்திரங்களை பதிவு செய்தால் சிறை தண்டனை ஜனாதிபதி ஒப்புதலுக்கு சட்டமசோதா அனுப்பி வைப்பு

சென்னை: போலி பத்திரங்களை பதிவு செய்தால் சிறை தண்டனை விதிக்கும் சட்டமசோதா பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் சார்பதிவளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் ஒரு சில நேரங்களில் போலியான ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதில், சார்பதிவாளர்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் நிலங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நீதிமன்றம் செல்கின்றனர்.

இந்த மாதிரியான வழக்குகள் ஏராளமானவை நிலுவையில் உள்ளது. இதனால், வழக்கை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் 3ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2021ம் ஆண்டு தமிழ்நாடு பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில், போலியான ஆவண பதிவு செய்யும் பட்சத்தில், மாவட்ட பதிவாளரே உரிய விசாரணை நடத்தி தீர்வு காண முடியும். மேலும், மாவட்ட பதிவாளரின் விசாரணையில் திருப்தி இல்லையெனில் 30 நாட்களுக்குள் டிஐஜியிடம் மேல்முறையீடு செய்யலாம். அப்படியும் தீர்வு இல்லை எனில் அதன்பிறகு பதிவுத்துறை ஐஜி மற்றும் செயலாளர் வரை முறையிட முடியும்.

இந்த விசாரணையில் 22ஏ மற்றும் 22பி பிரிவுகளுக்கு முரணாண போலியான பத்திரப்பதிவு என்பது தெரிய வந்தால் 3 ஆண்டுகள் பதிவு அலுவலருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். இல்லையெனில் இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதையடுத்து உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டன. தற்போது, அந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் போலியான ஆவணப்பதிவை தடுக்க முடியும். மேலும், ஒரு முறை பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் என்று பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: