துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பைனான்சியரின் தலையை கூவம் ஆற்றில் தேடும் பணி தீவிரம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

சென்னை: மணலியில் பைனான்சியரை தலை, கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பைனான்சியரின் தலையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி, 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (65), திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி லட்சுமி (60). தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள். சக்கரபாணி பைனான்ஸ் தொழில் செய்து வருவதால், பணத்தை வசூலித்துவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர், மணலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்கரபாணியை தேடினர்.அவரது செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, ராயபுரம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிக்னல் காட்டியது. உடனே ராயபுரம் போலீசார் உதவியுடன் மணலி போலீசார் சிக்னல் காட்டிய வீடு உள்ள பகுதிக்கு சென்றனர்.

அங்கு ஒரு வீட்டின் முன்பு அவரின்  பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வீட்டில், ரத்த கறையுடன் சாக்கு மூட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்தபோது, கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், மனித உடலின் பாகங்கள் இருந்தன. தலையை காணவில்லை. போலீசார், இதுபற்றி அந்த வீட்டில் இருந்த தமிம்பானு (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், தமிம் பானுவும், அவரது தம்பி வாஷிம் பாஷாவும் (37) சேர்ந்து சக்கரபாணியை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து தமிம்பானு, வாஷிம் பாஷா ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் தமிம்பானுவுக்கும் சக்ரபாணிக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமீம்பானு, ராயபுரம் பகுதிக்கு வந்த பின்னரும் இருவருக்கும் தொடர்பு நீடித்துள்ளது. கடந்த 10ம் தேதி இரவு பைக்கில் ராயபுரம் வந்த சக்கரபாணி, மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், தமீம்பானு வீட்டிற்கு சென்று, அவருடன் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த வாஷிம்பாஷாவுக்கும், சக்கரபாணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாஷிம்பாஷா சரமாரியாக தாக்கியதில் தடுமாறிய சக்கரபாணி கீழே விழுந்துள்ளார். ஏற்கனவே போதையில் இருந்ததால் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சக்கரபாணி இறந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள் உள்ள ஒரு அறையில் சக்கரபாணி சடலத்தை வைத்துள்ளனர். மறுநாள் காலையில் தனது நண்பரான ஆட்டோ டிரைவர் டெல்லிபாபு என்பவரை அழைத்து வந்து, சடலத்தை எப்படி மறைக்கலாம் என்று ஆலோசித்துள்ளனர். அப்போதுதான் கை, கால், உடல் என தனித்தனியாக வெட்டி எடுக்கலாம் என்று திட்டமிட்டு, அவ்வாறு செய்துள்ளனர். உடல் முழுவதையும் தனித்தனியாக வெட்டி ஒரு சாக்குமூட்டையில் வைத்துள்ளனர்.

ஆனால் வெளியில் எப்போதும் ஆட்கள் இருந்ததால் வெளியில் எடுத்து செல்ல முடியவில்லை. இதனால் முதலில் தலையை மட்டும் தனியாக ஒரு பையில் போட்டு, டெல்லிபாபுவிடம் கொடுத்துள்ளனர். அவர், அந்த தலையை கூவத்தில் வீசியுள்ளார் என்று தெரியவந்தது. ஆனால் உடல் இருந்த சாக்கு மூட்டையை வெளியில் எடுத்து செல்ல முடியாமல் 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்துள்ளனர். துர்நாற்றம் வீசுவது வெளியில் தெரியாமல் இருக்க பினாயில், வாசனை திரவியம் தெளித்துள்ளனர். சடலத்தில் இருந்து வழிந்த ரத்தத்தை தினமும் கழுவி விட்டு வந்தனர் என தெரியவந்தது.உடல் பாகங்கள் கிடைத்தாலும், தலை கிடைக்கவில்லை. தலையை எடுத்து சென்று கூவத்தில் வீசிய ஆட்டோ டிரைவர் டெல்லிபாபுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ேநற்று காலை சக்கரபாணியின் தலை யை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: