செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 18 குழுக்கள் அமைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை சிறப்பாக நடத்தி முடிக்க ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் 18 குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்தநிலையில், செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டியை சிறப்பாக நடத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய 18 வகையான குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வீரர், வீராங்கனைகள், முக்கிய பிரமுகர்கனை வரவேற்க வரவேற்பு குழு, சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தனிக்குழு, போக்குவரத்து வசதிகளை கண்காணிக்க தனிக்குழு, மருத்துவ வசதிகள் கண்காணிப்பு குழு, பாதுகாப்பு குழு, மேடை அமைப்பு குழு, தொழில்நுட்பக் குழு என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய மொத்தம் 18 வகையான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் தலைவர்களாக சம்மபந்தப்பட்ட துறைகளை சேர்ந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரவேற்பு குழுவுக்கு டி.ஜெகநாதன், போக்குவரத்து குழுவிற்கு கே.கோபால், ஸ்பான்சர் ஷிப்புக்கு எஸ்.கிருஷ்ணன் மற்றும் பணீந்திர ரெட்டி, தொடக்க மற்றும் நிறைவு விழா குழுவுக்கு டி.கார்த்திகேயன், சாலை, குடிநீர் சப்ளை, தூய்மை பணிக்கு ஷிவ்தாஸ் மீனா, விருந்தோம்பல் நிகழ்ச்சி மேலாண்மை, கலைநிகழ்ச்சி, பரிசளிப்பு ஆகியவற்றின் குழுவுக்கு பி.சந்தரமோகன், ஊடகம், விளம்பரத்துக்கு வி.பி.ஜெயசீலன், பாதுகாப்பு குழுவிற்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு, தங்குமிடம், உணவுக்கு குமார் ஜெயந்த், சுகாதாரம், மருத்துவ பணிக்கு பி.செந்தில்குமார், அரங்கு ஏற்பாட்டுக்கு தயானந்த் கட்டாரியா, மின்சாரத்துக்கு ராஜேஷ் லக்கானி, சாலை மேம்பாட்டுக்கு தீரஜ்குமார், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு குழுவுக்கு காகர்லா உஷா, சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு ஆர்.ஆனந்த குமார், செஸ் ஒலிம்பியாட் கட்டுப்பாட்டு அறைக்கு ஏ.கே.கமல்கிஷோர், தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிக்கு நீரஜ் மிட்டல் ஆகியோரும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

Related Stories: