1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் தொன்மை மாறமால் புனரமைக்கப்படும்; இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்கள் தொன்மை மாறமால் புனரமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர்- அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் திருக்கோயில்,  பழவேற்காடு, அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருப்பாலைவனம், அருள்மிகு லோகாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்விற்குப்பின் அமைச்சர் கூறியதாவது, மீஞ்சூர்- அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் திருக்கோயில் ,இத்திருக்கோயில் சோழர் கால கட்டடக்கலையைச் சேர்ந்தது, நன்செய், புன்செய் நிலம்  என மொத்தம் 192.61 ஏக்கர் பரப்பளவை கொண்டது, 57 கற்சிலா  விக்கிரங்களும், 24 உற்சவ விக்கிரங்களும் உள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள மடப்பள்ளி, நந்தவனம், ராஜகோபுரம், நவகிரக கோயில் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேம்படுத்தப்படும். பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில் இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் தொன்மையானது, ஒரு கால பூஜைத் திட்டம் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது, புன்செய் நிலம் 1.20 ஏக்கர் பரப்பபளவை கொண்டது, 22 கற்சிலா  விக்கிரங்களும், 8 உற்சவ விக்கிரங்களும் உள்ளது. இத்திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 40 வருடங்களுக்கு மேலாகின்றது.

 இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் தொன்மையான திருக்கோயில் திருப்பணி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.  தொன்மை மாறாமல் திருப்பணி மேற்கொள்வதற்கு ஸ்தபதி ஆய்வறிக்கைப் பெற்று செயல்படுத்துதல், திருக்கோயில் நிலத்தினை  குத்தகைக்கு விட நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேம்படுத்தப்படும். திருப்பாலைவனம், அருள்மிகு லோகாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் திருக்கோயிலில் தொன்மை மாறமால் திருப்பணி வெகுவிரைவில் மேற்கொள்ள மதிப்பீடு தயார் செய்ய நடவடிக்கை எடுத்தல், பராமரிப்பு பணிகள் செய்தல், சிலைகள் பாதுகாப்பு அறை கட்டுதல் போன்ற பணிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப, உதவி ஆணையர் திருமதி.சித்ரா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: