சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள 14,972 நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் கருவிகளை வழங்கினார் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்..!!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு 14,972 நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் கருவிகளை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல் முன்கள பணியாற்றிய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக கொரோனா தடுப்பு உபகரணங்களான, முகக்கவசங்கள், கையுறைகள், திரவ சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டும், மருத்துவ முகாம்கள் மற்றும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு தொடர்ந்து காவல் ஆளிநர்களுக்கான நலத்திட்ட பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலனுக்காகவும், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது உடல்நிலையை தாங்களே பரிசோதித்து கொள்ளும் விதமாகவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், இன்று காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற காவல் ஆளிநர்களுக்கான நலத்திட்ட நிகழ்ச்சியில், சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 14,972 நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் (Pulse Oximeter) கருவிகளை காவல் ஆளிநர்களுக்கு வழங்கும் அடையாளமாக, 150 காவல் ஆளிநர்களுக்கு நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் கருவிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 30 வயது முதல் 60 வயது வரையுள்ள காவல் ஆளிநர்களுக்கு மேற்படி நாடித்துடிப்பு ஆக்சிமீட்டர் கருவிகள் வழங்கப்படும் எனவும்  நாடித்துடிப்பு ஆக்சி மீட்டர் கருவி மூலம், காவல் ஆளிநர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களது உடலில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும், நாடித்துடிப்பு அளவினையும் தாங்களே பரிசோதித்துக் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, தங்களது உடல்நிலையை பாதுகாக்கலாம் எனவும் காவல் ஆணையாளர்  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: