வங்கி கிளார்க் பணி நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு: முதல்வருக்கு ஊழியர்கள் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கடிதம்

சென்னை: ஒன்றிய அரசின் வங்கி கிளார்க் பணிநியமனங்களில் மாநில மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி பணிகளில் கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் படிக்க, எழுத, பேசவேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. தற்போது வங்கி பணியாளர் தேர்வு கழகம் மாநில மொழிகளில் தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றும், அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்றும் விளம்பரப்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். 2022-23-ம் ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்கு தேர்வு நடைபெற்று, 843 பேர் அப்பதவிகளில் நியமிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாங்க் ஆப் இந்தியாவில் 21 பதவிகளும், கனரா வங்கிகளில் 90, இந்தியன் வங்கியில் 555, பஞ்சாப்- சிந் வங்கியில் 5, யூகோ வங்கியில் 5, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 147 கிளார்க் பணியிடங்கள் என மொத்தம் 843 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அமைப்பின் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கூறியுள்ளார். இதில் இந்த ஆண்டு வெளிமாநிலத்தவர்கள் மிக அதிகளவில் ஏறத்தாழ 50%-க்கும் அதிகமாக, அதாவது 843 பேரில் 400-க்கும் அதிகமான தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர் பணியில் சேர இருப்பதாக நம்பப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். வங்கி கிளார்க் பணிக்கு சேருவோர், கிராமம் மற்றும் சிறு நகரங்களில் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டியிருப்பதால், மாநில மொழி அவசியம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எழுதிய கடிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இப்பிரச்சனை குறித்து ஒன்றிய அரசின் நிதித்துறை மற்றும் வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட முதலமைச்சர் தலையிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.           

Related Stories: