4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு தலைமையில் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இலங்கைக்கு மனிதாபிமான முறையில்  பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் உதவிகளை வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 137 வகையான மருந்து பொருட்கள், 500 டன் பால்பவுடர்களை வழங்க முடிவு செய்தது. இதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கடந்த மாதம் 29ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையிலும் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.  

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு உதவி பொருட்கள் வழங்கும் பணிகள் கடந்த 10 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது, இந்த நிவாரண பொருட்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கைக்கு பொருட்கள் அனுப்ப 4 ஐஎஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் இருந்தும் தமிழக அரசு இலங்கைக்கு வழங்கும் நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் நிவாரண பொருட்களை அனுப்ப ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்கள் மட்டுமல்ல, தற்போது எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் தொழில் அதிபர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கும் பணத்துக்கும், இலங்கைக்கு தேவையான உதவி பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: