நூல் விலையை குறைப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: நூல் விலையை குறைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் 45 சதவீத நூற்பாலைகள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ளது. கடந்த 12 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களுக்கும் ஒரு கிலோவிற்கு சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை விலை உயர்ந்துள்ளது. ஆளுநர் உரையின்போது, அனைத்து ரக நூல் விலை உயர்வு பற்றியும், விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் பேசினேன்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், நம் நாட்டுக்கு ஏற்றுமதி மூலம் பல நூறு கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டுவதிலும் திருப்பூர் பின்னலாடை தொழில் முன்னணியில் இருந்தது. ஆனால் இப்போது, நூல் விலை உயர்வினால் திருப்பூர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களும் வேலைவாய்ப்பின்றி ஸ்தம்பித்து போயுள்ளனர், மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். நூல் விலை குறைப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: