சட்டவிரோதமாக நன்கொடை பெற்றதாக சென்னை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உட்பட 14 பேர் கைது

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடைகள் பெற்ற விவகாரம்  தொடர்பாக, சென்னை உட்பட நாடு முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்  அதிரடி சோதனை நடத்தினர். வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு  ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உதவியுடன் சட்டவிரோதமாக பணம்  பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஒன்றிய  உள்துறை அமைச்சகம் சார்பில் விசாரணை நடத்த சிபிஐக்கு கடிதம் ஒன்று  எழுதியது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஒன்றிய  உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் 2 அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து  தொண்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ய உதவியது  தெரியவந்தது.

இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பணியாற்றிய  குற்றம்சாட்டப்பட்ட  2 அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் பிடித்து விசாரணை  நடத்தினர். அதில் சில தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து  சட்டவிரோதமாக பணம் அனுப்ப தடையில்லா சான்று வழங்கியதும், அதற்காக பெரிய  அளவில் பணம் கைமாறியதும் தெரியவந்தது. பிடிப்பட்ட 2 அதிகாரிகளில் ஒருவர்  சென்னை ஆவடியை சேர்ந்தவர். எனவே இருவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த  தகவலின் படி, சிபிஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, அரியானா,  அசாம், மணிப்பூர், இமாச்சலபிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உட்பட 40 இடங்களில்  கடந்த செவ்வாய்கிழமை அதிரடி சோதனை நடத்தியது. குறிப்பாக,  சென்னையில்  ஆவடி, கோவை, கடலூர், நீலகிரி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த  சோதனையில் கணக்கில் வராத ரூ.3.21 கோடி பணம், வழக்கிற்கான முக்கிய ஆவணங்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ  அதிகாரிகள் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், சோதனையில்  கிடைத்த ஆவணங்களின் படி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம்  பரிமாற்றம் செய்ய உதவிய சென்னையை சேர்ந்த ராமானந்த் பரிக்,  ராணிப்பேட்டையில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ராபின் தேவதாஸ், கோவையில்  மருத்துவமனை ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றி வரும் வாகீஷ் மற்றும் ஒன்றிய  உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உட்பட 14 பேரை சிபிஐ  அதிகாரிகள் அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக  தொண்டு நிறுவனங்களுக்கு பணம்  பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது  செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: