தாம்பரம் காவல் ஆணையர் சரகத்தில் ஆரோக்கியமான உடலை பேணி காக்க போலீசாருக்கு உடல் எடை பரிசோதனை: எடை குறைந்தால் மருத்துவ ஆலோசனைக்கு பரிந்துரை

சென்னை: தாம்பரம் காவல் ஆணையர் சரகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் போலீசாருக்கு வாரந்தோறும் உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் மாநகராட்சிக்கு ஒரு காவல் ஆணையரகம் என்ற அடிப்படையில் தாம்பரம் காவல்துறை ஆணையரகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதி உருவாக்கப்பட்டது. தாம்பரம் முதல் காவல் ஆணையரக டிஜிபியாக ரவி பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், தாம்பரம் காவல் ஆணையரக சரகத்தில் உள்ள 36 காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை ஒவ்வொரு வாரமும் கட்டாயம் உடல் எடை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அனைத்து காவல் நிலையங்களிலும் வாரந்தோறும் அந்தந்த காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் மருத்துவ உதவியாளர் எடை பரிசோதனை இயந்திரம் மூலம் அனைத்து காவலர்களும் எடை பரிசோதனை செய்தனர். மீண்டும் அடுத்த வாரம் எடை பரிசோதனை செய்யும் போது, முந்தைய வாரம் எடுத்த எடை அளவுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது, எடை குறைந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனே அரசு மருத்துவர் ஆலோசனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அதன்படி சம்பந்தப்பட்ட காவலருக்கு உடல் குறித்து பரிசோதனை செய்து எடை குறைவதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எடை பரிசோதனை செய்தனர்.

Related Stories: