சங்கரன்கோவில் அருகே வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாசில்தார்: தாலுகா அலுவலகத்தில் 15 மணி நேர சோதனையால் பரபரப்பு

திருவேங்கடம்:  தென்காசி மாவட்டம், திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியம் சாயமலை அருகேயுள்ள மேலசிவகாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜ் (49) என்பவர் தனது தாய் ராஜம்மாள் இறந்ததை தொடர்ந்து வாரிசு சான்றிதழ் கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். 3 மாதம் கடந்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதையடுத்து அவர் தாசில்தாரை அணுகியபோது அவர் இதற்காக ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அழகுராஜ், இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்  கொடுத்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை அழகுராஜ், தாசில்தார் அலுவலகம் கொண்டு வந்து அந்த பணத்தை அங்குள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் மர்ம நபரால் எடுத்துச்ெசல்லப்பட்டு மாயமானது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி முதல் அங்கிருந்த அலுவலக குறிப்பேடுகள், ஆவணங்களை பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை விடிய விடிய அதாவது நேற்று அதிகாலை 4.30 மணி வரை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 தாசில்தார் மைதீன் பட்டாணி (50) மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சோதனை மற்றும் விசாரணையில் பணம் ஏதும் சிக்கவில்லை. பின்னர் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தாசில்தார் மைதீன் பட்டாணியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். ரசாயனம் தடவிய பணத்தை புரோக்கர் ஒருவர் நைசாக எடுத்து சென்றதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: