திருவண்ணாமலை மாவட்டத்தில் 29,707 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதினர்-1,533 பேர் ஆப்சென்ட்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 29,707 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதினர். 1,533 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.தமிழகம் முழுவதும் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 252 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 15,459 மாணவர்கள், 15,521 மாணவிகள் உட்பட 30,980 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதுதவிர 260 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

அதையொட்டி, மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தனித்தேர்வர்களுக்கு 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்களை பாதுகாப்பாக வைக்க 8 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 118 முதன்மை கண்காணிப்பாளர்கள், 123 துறை அலுவலர்கள், 179 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் ஆகிேயார் தேர்வு மைய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்க தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வின் முதல் நாளான நேற்று தமிழ் பாடத்தேர்வு நடந்தது. தேர்வுக்கு சென்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அச்சமும், பதற்றமும் இல்லாமல் தேர்வு எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.

பிளஸ் 1 தேர்வின் முதல் நாளான நேற்று பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 29,707 பேர் தேர்வு எழுதினர். மேலும், 1,533 பேர் தேர்வு எழுதவரவில்லை. மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கும் பணியில் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஈடுபட்டனர். முதல் நாளன்று முறைகேடு புகாரில் யாரும் சிக்கவில்லை.

Related Stories: