பேரவையில் முதல்வர் தகவல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் குறைந்துள்ளது

திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு  துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் போக்சோ  சட்டத்தின்கீழ் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வாண்டு (2022) மார்ச்  மாதம் வரை 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றுள் 3,441  வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

மேலும்,  பெண்களுக்கெதிரான குற்றங்களில் மானபங்கம் தொடர்பாக 1,053 வழக்குகளும்,  பெண் கடத்தல் தொடர்பாக 547 வழக்குகளும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக 416  வழக்குகளும், போக்சோ பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3,350 வழக்குகளும்  தாக்கலாகியிருக்கின்றன.  பெண்களுக்கெதிரான குற்றங்கள், குறிப்பாக வரதட்சணை  சம்பந்தமான கொலைகள், பாலியல் கொடுமைகள், மானபங்க வழக்குகள் போன்றவை  தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் முன்வந்து புகார்களை அளித்து  வருகிறார்கள்.

திமுக ஆட்சி பெண்களுக்கெதிரான குற்றங்களின் மீது உரிய  நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள்  அச்சமின்றி புகார்களை அளித்து வருகிறார்கள்.  கிராமங்களில் விழிப்புணர்வு  கமிட்டிகள் மூலம் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் முன்கூட்டியே தகவல் அறிந்து  தடுக்கப்படுகிறது. போக்சோ சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த ஒவ்வொரு  வகுப்பறையிலும் 1098 என்ற சிறார் உதவி எண் ஒட்டப்பட வேண்டும் என்று  உத்தரவிட்டு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான குற்றத்தடுப்பு விழிப்புணர்வை  ஏற்படுத்த ஒலி, ஒளி கட்டமைப்போடு கூடிய இரண்டு பல்நோக்கு பயன்பாட்டு  விழிப்புணர்வு வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

பாலியல் குற்றங்களில்  இருந்து குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு உதவிட போக்சோ சட்டத்தின்கீழ்  நிதியும் உருவாக்கப்பட்டது.  இதன் தாக்கம்,  குற்ற நிகழ்வுகள்  குறைந்துள்ளதில் எதிரொலிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல்  வன்கொடுமை குற்றங்களைப் பொறுத்தமட்டில், போக்சோ சட்டத்தின்கீழ் 4,496  வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  பதிவு செய்வது முக்கியமல்ல;  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுதான் மிக முக்கியம். அந்த வகையில்  பார்த்தால், பதிவி செய்யப்பட்ட வழக்குகளில், அதிகமான எண்ணிக்கையில்,  அதாவது, 3,441 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு  இன்றைக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிட்டது.

லாக்-அப் குற்றங்கள்: தமிழக அரசை பொறுத்தவரையில் லாக்-அப் குற்றங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில், குற்றங்கள் குறைந்துள்ளன என்பதற்கு இன்னொரு முக்கிய ஆதாரமாக ஒன்றை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் 12 லட்சத்து 74 ஆயிரத்து 36 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் அது பெருமளவு குறைந்து 8 லட்சத்து 66,653 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. இதன்மூலம் இந்த ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருக்கிறது அல்லது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: