வேளாண் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்: மசோதா நிறைவேற்றம்

தமிழக சட்டப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்ட மசோதா ஒன்றை நேற்று பேரவையில் அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்ட மசோதாவின்படி, துணை வேந்தரை நீக்குவதற்கான சட்டத்தில் புதிய பிரிவை புகுத்த வேண்டும். அதாவது, சட்டத்தின்படி நடந்து கொள்ளாதது அல்லது வேண்டுமென்றே செயல்படாமல் இருப்பது அல்லது அவரிடம் உள்ள அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய காரணங்களின் பேரில் துணை வேந்தரை அரசு ஆணை பிறப்பிக்காமல் நீக்க முடியாது.  

அவர் மீது பதவி நீக்கம் தொடர்பான முன்மொழிவு அளிக்கப்பட்டு இருந்தால், உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத அரசு அதிகாரியின் விசாரணைக்கு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்போது துணை வேந்தர் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். பின்னர் விசாரணை அறிக்கையை துணை வேந்தருக்கு வழங்கி அதில் அவரது கருத்துக்கள் ஏதும் இருந்தால் அதைப் பெற வேண்டும். அதன் பின்னரே அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இது குரல் வாக்கெடுப்பின் மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.  இதேபோல் நேற்று முன்தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை நியமிப்பதற்கான சட்ட மசோதா நேற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: