தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 8,446 கேள்விகள் கேட்டு தாயகம் கவி முதலிடம்: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அதிகபட்சமாக 8,446 கேள்விகளை கேட்டார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று நிறைவடைந்தது. முன்னதாக சபாநாயகர் மு.அப்பாவு ஆற்றிய உரை: 16வது சட்டசபையின் 3ம் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் 5.1.2022 அன்று தொடங்கி 7.1.2022 வரையும், 2வது கூட்டம் (சிறப்புக் கூட்டம்) 8.2.2022 அன்றும், 3வது கூட்டம் 18.3.2022 முதல் 24.3.2022 வரையும், 4வது கூட்டம் 6.4.2022 முதல் 10.5.2022 இன்று (நேற்று) வரை நடந்தது. அந்த வகையில் சட்டசபை கூடிய மொத்த நாட்கள் 32 ஆகும். எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட மொத்த கேள்விகள் 27 ஆயிரத்து 713. அவற்றை 121 எம்.எல்.ஏ.க்கள் அளித்திருந்தனர். அவற்றில் 12 ஆயிரத்து 583 கேள்விகள் அனுமதிக்கப்பட்டன. வினாக்கள் அளித்ததில் முதல் 5 நிலைகளில் இருப்பவர்கள் முறையே, ப.சிவகுமார் என்கிற தாயகம் கவி (திமுக) - 8,446 கேள்விகள், ஜி.கே.மணி (பாமக) - 8,312 கேள்விகள், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா (திமுக) - 5,425 கேள்விகள், ரா.அருள் (பாமக) - 5,036 கேள்விகள், ச.சிவகுமார் (பாமக) - 2,937 கேள்விகள்.

அவையில் அதிக அளவு கேள்விகளுக்கு விடையளித்த முதல் 5 நிலைகளில் இருக்கும் அமைச்சர்கள் முறையே பொன்முடி, செந்தில் பாலாஜி - 15 கேள்விகள், அமைச்சர் மெய்யநாதன் - 14 கேள்விகளுக்கும், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலா 13 கேள்விகளுக்கும், அமைச்சர் சேகர்பாபு- 12 கேள்விகளுக்கும், கே.என்.நேரு 11 கேள்விகளுக்கும் விடையளித்தனர். அவை விதி 110ன் கீழ் முதல்வர் அளித்த அறிக்கை 10 ஆகும். 5.1.2022 முதல் 10.5.2022 வரை சட்டசபை நடந்த அனைத்து நாட்களும் அசோக்குமார், அமலு, அருள், வி.ஜி.ராஜேந்திரன், சிவகாம சுந்தரி, சின்னதுரை, சுதர்சனம், சுந்தர், செல்வபெருந்தகை, துரை. சந்திரசேகர், நாகைமாலி, பாலாஜி, பிரின்ஸ், வரலட்சுமி, ஜவாஹிருல்லா உள்பட 47 பேர் வருகை தந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் மொத்தம் 22, 651 அனுமதிக்கப்பட்டனர். 5.1.2022ல் கவர்னர் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் 2 நாள் நடந்தது. அதில் 14 எம்எல்ஏக்கள் பேசினர். ஆளும் கட்சியில் 6 பேர் 57 நிமிடங்கள் பேசினர். மற்ற கட்சியை சேர்ந்த 8 பேர் 3 மணி 41 நிமிடங்கள் பேசினர். அந்த வகையில் மற்ற கட்சியினருக்கு 2 மணி 44 நிமிடங்கள் கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: