தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் இருப்பார்: சட்ட மசோதாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்தார்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்துவரும் நிலையில், துணைவேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்ய, வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று திருத்தம் மேற்கொண்டு நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தொடர்ச்சியாக சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வேந்தராகவும் முதலமைச்சரே இருப்பார் என்று சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம், 1991-ம் ஆண்டு தெலங்கானா பல்கலைக்கழக சட்டத்தில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிப்பது, தொடர்பான மாநில அரசானது அதிகாரம் கொண்டுள்ளது.

2000-ம் ஆண்டு கர்நாடகா மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் படி துணைவேந்தரானவர் மாநில அரசின் ஒப்புதலுடன் வேந்தரால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்றும் பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கேற்ப தமிழ்நாடு மாநில அரசானது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என்று கருதுகிறது. அரசானது அந்த நோக்கத்துக்காக 1971-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்தை திருத்துவதாக முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விழைவதாகவும் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: