சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னையில் 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக, ஒடிசாவில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  அதேபோல அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது.

இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கனமழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதேபோல தமிழகத்தின் டெல்டா மாவட்டங்ளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை நீடிக்கும். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 செ.மீ. மழை, பதிவானது. நந்தியாறு, லால்குடி, தென்பரநாடு, கேவிகே காட்டுக்குப்பம், பாடலூரில் தலா 4 செ.மீ.,

திருப்பத்தூர், பல்லம்பாடு, ஆலங்காயம், விரிஞ்சிபுரம், ஆம்பூர், மேலாலத்தூர், ஆத்தூர், கரியகோவிலில் தலா 3 செ.மீ. மழையும், தேவிமங்கலம், சமயபுரம், துவாக்குடி, எண்ணூர், கேளம்பாக்கம், திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருக்கழுக்குன்றம், பெரம்பலூர், குடியாத்தம், திருவையாறு, வாணியம்பாடி, கருங்குளத்தில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: