கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: மசோதா தாக்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய் சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது: திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலம் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மலம் மற்றும் கழிவு நீரின் பாதுகாப்பான வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு, சரக்கு வண்டிகள், இழுவை வண்டிகள் அல்லது கழிவு நீர் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் குளங்களின் வெளியேற்றுதலுக்காக பயன்படும் பிற வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்தை ஒழுங்குமுறைப்படுத்துதல் தவிர்க்க முடியாததாகும். எனவே மலம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் தேசிய கொள்கைக்கு ஏற்ப ஒரு விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் 1978ம் ஆண்டு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்காக இந்த சட்டமசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி கழிவுநீர் தொட்டியில் அல்லது அங்குள்ள துப்புரவு அமைப்பில் அபாயகரமாக சுத்தம் செய்தலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த நபரும் ஈடுபடவில்லை என்பதை உரிமையாளர் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இச்சட்டத்தில் விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை மீறினால் முதல் குற்றத்திற்காக ரூ.25 ஆயிரம், 2வது முறை குற்றம் செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் வரை நீட்டிக்கப்படலாம். அவர் அபராதத் தொகையுடன் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: