அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ரூ.1,000 கோடியில் 1,500 கோயில்கள் புனரமைக்கப்படும்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,500 கோயில்கள் ரூபாய் 1,000 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்தால், அதனை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் சட்டமன்றத்தில் எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் மேயர் வேண்டுகோளை ஏற்று சேமாத்தம்மன் கோயிலினை ஆய்வு செய்துள்ளோம். இதில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. திருக்குளம் வற்றியுள்ளது. இதுகுறித்தான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சேமாத்தமன் கோயிலில் உள்ள குளத்தை 70 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கவும், மண்டபங்களை சீரமைக்க 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. ஒரு ஆண்டிற்கு 1000 ஏக்கர் குறைந்தது 500 கோடி ரூபாய் அளவிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என்ற அளவில் செயல் திட்டம் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் சொத்துக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யமுடியாத வகையில், சுற்றுச்சுவர் அமைத்து, இந்து சமய அறநிலைய துறை கோயிலுக்கு சொந்தமான சொத்து என கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

45 இடங்களில் இருந்த பல்லக்கு பவனி தற்போது குறைந்து வருகிறது. இனி வருங்காலத்திற்குள் அதற்கு மனித நேயத்துடன் கூடிய மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஜீயர்கள், ஆதீனங்கள் உள்ளிட்ட ஆன்மீக பெரியவர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தும் ஆவேச குரலுக்கு இந்த அரசு எதிர்வினை ஆற்றாது, அவர்களின் கோரிக்கையை கேட்டு நடவடிக்கை எடுக்கும். வசை பாடியவர்கள் என்று பாராது அவர்களும் ஆளும் அரசை வாழ்த்தும் அளவிற்கு செயல்படுவோம்.  தமிழ்நாடு முதலமைச்சரை ஆதீனங்கள் சந்தித்த போது, பட்டினப்பிரவேசம் குறித்து தொன்மையாக நடைபெறும் வழக்கம் இது என ஆதீனங்கள் குறிப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து முதல்வர் இதற்கு அனுமதி அளித்துள்ளார். அரசியல் ரீதியாக தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 1500 கோயில்களுக்கு 1000 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேசும்போது, தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்​. இந்த ஆய்வின்போது திரு.வி.க நகர் சட்டமன்றத்தில் உறுப்பினர் தாயகம் கவி, மேயர் பிரியா ராஜன், சென்னை 1 மண்டல இணை ஆணையர் ந.தனபால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேகஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: