களக்காடு அருகே ஊருக்குள் புகுந்து கரடிகள் மீண்டும் அட்டகாசம்: வாழைகள் நாசம்

களக்காடு: களக்காடு அருகே ஊருக்குள் புகுந்த கரடிகள் வாழைகளை நாசம் செய்ததால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பத்தியில் கடந்த 1 மாத காலமாக கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதுவரை இப்பகுதியில் கரடிகளால் 500க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் கரடிகள் விளைநிலங்களுக்குள் படையெடுத்தன. அவைகள் வாழைகளை சாய்த்து அட்டகாசம் செய்தன. இதில் 50க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இந்த வாழைகள் கீழவடகரையை சேர்ந்த விவசாயிகள் ஜெயராஜ் (50), பாலன் (44), கணேசன் (50), சுப்பிரமணியன் (53) ஆகியோர்களுக்கு சொந்தமானது ஆகும். குலை தள்ளிய நிலையில் வாழைகளை கரடிகள் துவம்சம் செய்ததால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி பாலன் கூறுகையில், கரடிகள் அட்டகாசம் குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். விவசாயிகள் குறை தீர் நாளில் மாவட்ட கலெக்டரிடமும் நேரில் மனுகொடுத்துள்ளோம். இருப்பினும் கரடிகளை விரட்டவோ, நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் இரவில் நாங்கள் விளைநிலங்களில் காவல் பணிக்கு செல்லும் போது, நீங்கள் காவலுக்கு வரக்கூடாது என்று வனத்துறையினர் கூறுகின்றனர். மலையடிவாரத்தில் விவசாயம் செய்யக் கூடாது என்றும் மிரட்டுகின்றனர். எங்களுக்கு வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயம் செய்யக்கூடாது என்றால் அரசு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்” என்றார். இதுவரை கரடிகள் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். சிவபுரம், கள்ளியாறு பகுதியில் சிறுத்தை புகுந்து நாய்களை வேட்டையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: