தேவூர் சுற்றுவட்டார பகுதியில் ஆலை கரும்பு விலை வீழ்ச்சி-டன்னுக்கு ₹800 சரிந்தது

இடைப்பாடி : இடைப்சேலம் மாவட்டம், இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் தேவூர், சென்றாயனூர், பெரமச்சிபாளையம், பாங்கிகாடு, ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, செட்டிபட்டி, அண்ணமார் கோயில், கொட்டாயூர், சின்னாம்பாளையம், சோழக்கவுண்டனூர், மேட்டுபாளையம், பாலிருச்சம்பாளையம், காவேரிபட்டி, சுண்ணாம்புகரட்டூர், புள்ளாகவுண்டம்பட்டி, தண்ணிதாசனூர், குஞ்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் ஆலைக்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

இங்குள்ள வயல்களில் தற்போது கரும்பு அறுவடைக்கு தயாராகி உள்ளது.

ஆனால், கடந்த சில நாட்களாக தேவூர், சென்றாயனூர், பெரமச்சிபாளையம், செட்டிபட்டி, குஞ்சாம்பாளையம், தண்ணிதாசனூர், வெள்ளாளபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் கரும்பு அரவை ஆலைதாரர்கள், விவசாயிகளிடம் நேரடியாக சென்று கரும்பு டன் ஒன்றை ₹1700க்கு மட்டுமே மொத்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, ஆலைக்கரும்பு டன் ₹2500க்கு கொள்முதல் செய்தனர். தற்போது 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கரும்பு அறுவடையை துவக்கி உள்ளதால் ஒரு டன் கரும்பை ₹1500 முதல் ₹1700 என விலையை குறித்து ஆலைதாரர்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து தேவூர் கரும்பு விவசாயிகள் கூறுகையில், ‘தேவூர் சுற்றுவட்டார பகுதியில், கிணற்று பாசனம் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் இங்குள்ள தனியார் ஆலைதாரர்கள், ₹800 வரை விலையை குறைத்து கரும்பை கொள்முதல் செய்து, நாட்டு சர்க்கரை தயாரித்து சித்தோடு, கவுந்தப்பாடி, சேலம் கிழக்கு மாவட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று சிப்பம் ஒன்றை ₹1000க்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர்,’ என்றனர்.

Related Stories: