ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட் வந்தது: அமைச்சர், எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்பு

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டை வந்தடைந்தது. அதனை அமைச்சர் நாசர், எம்எல்ஏக்கள் மலர்தூவி வரவேற்றனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், 3 டிஎம்சி சேதாரம் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.தற்போது, கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. தெலுங்கு - கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.

மேலும், தமிழக நீர்வள அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடுமாறு. ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். இதை தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 5ம் தேதி காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், படிப்படியாக உயர்த்தி 1,500 கன அடியாக உயர்ந்தப்பட்டது. இந்த தண்ணீர், 152 கிலோ மீட்டர் கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டை நேற்று காலை 11 மணிக்கு வந்தடைந்தது. இதனை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் கும்மிடிபூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி, துரைசந்திரசேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி ஆகியோர் மலர்தூவி வரவேற்றார்.

Related Stories: