வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பாஜக நிர்வாகி பக்காவை கைது செய்ய தடை: அரியானா ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பாஜக நிர்வாகி பக்காவை வரும் 10ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அரியானா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் வசிக்கும் பாஜக இளைஞரணி செயலாளர் தேஜிந்தர்பால் சிங் பக்காவை, அவதூறு கருத்துகளை  தெரிவித்ததாக பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். மொஹாலிக்கு அவரை அழைத்துச் சென்ற போது அரியானா போலீசார் பஞ்சாப் போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

டெல்லி போலீசார் பஞ்சாப் போலீசார் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளதாக  கூறி, பஞ்சாப் போலீசாரின் காரை மடக்கியதாக கூறப்பட்டது. தொடர்ந்து பக்காவை  பஞ்சாப் போலீசாரிடம் இருந்து மீட்ட அரியானா போலீசார், அவரை டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது, அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். இதற்கிடையே மொஹாலி நீதிமன்றம் பக்காவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பக்கா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் 10ம் தேதி வரை பக்காவை கைது செய்யக் கூடாது என்று நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் அட்வகேட் ஜெனரல் அன்மோல் ரத்தன் சித்து கூறுகையில், ‘வரும் 10ம் தேதி வரை பக்காவுக்கு எதிரான கைது வாரண்டை நிறைவேற்ற மாட்டோம். அவரை கைது செய்ய தற்போது அவசரம் இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தோம். எனவே, செவ்வாய்கிழமை வரை காத்திருப்போம்’ என்றார்.

Related Stories: