சென்னை அருகே பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 3 மணி நேர போராட்டத்துக்குப்பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர்

சென்னை: விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வரன், பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோன் அருகிலேயே வேறு சிலருக்கு சொந்தமான 4 பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் இருந்து பிளாஸ்டிக்குகள் பிரித்து எடுக்கப்பட்டு மறு சுழற்சிக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த குடோன்களில் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேலையாட்கள் யாரும் குடோனுக்கு வரவில்லை.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் ஒரு குடோனிலிருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்பகுதி மக்கள் உடனடியாக குடோன் உரிமையாளருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பூந்தமல்லி, விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காற்று பலமாக வீசியதால் பக்கத்தில் உள்ள குடோன்களுக்கும் தீ பரவியது. இதில் 3 குடோன்களில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது. இதற்கிடையே பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்தப் பகுதியி்ல் நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வாகனங்கள்கூட சம்பவ இடத்துக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால் அந்த பகுதியில் மக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சு திணறலும் ஏற்பட்டது. 3 மணி நேர போராட்டத்துக்குப்பின்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தால் பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: