2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட வழித்தடங்கள் நீட்டிப்பு குறித்து ஆய்வு கடற்கரை-செங்கல்பட்டு புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி: பேரவையில் நிதி அமைச்சர் அறிவிப்பு

பேரவையில் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக்கோரிக்கை மீது நேற்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்பு: ரயில் பெட்டிகள் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பயணிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக பெருந்திரள் துரிதப் போக்குவரத்து அமைப்பின் இயக்கம் மற்றும் பராமரிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துக்கொள்வதற்கான கருத்துருவின் மீது ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். புறநகர் ரயில் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்துவதற்கும் பயணத்தை எளிதாக்குவதற்கும் தெற்கு ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்து குறிப்பாக சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டிற்கு இடையே இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்களில் குளிர்பதன ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகள் விரும்பும் வசதிகளை கொண்ட ரயில் பெட்டி அறைகள் அறிமுகம் செய்வது குறித்து விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னையின் வடமேற்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் IIன் வழித்தடம் 5ஐ திருமங்கலத்திலிருந்து முகப்பேர் மற்றும் அம்பத்தூர் வழியாக ஆவடி வரை நீட்டிப்பதற்கான ஒரு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

Related Stories: