கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அதிமுக பிரமுகரின் சகோதரரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகரின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்கள் என இதுவரை 220க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. . கொடநாடு பங்களாவில் மர வேலை செய்து கொடுத்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அதிமுக நிர்வாகியுமான சஜீவன் உட்பட பலரிடம் சமீபத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று காலை 11 மணி முதல் அதிமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சஜீவன் சகோதரர் சுனிலிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவில் நீலகிரி மாவட்டம் கூடலூர் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காரில் வந்தவர்களின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த கும்பலில் ஒருவர் சஜீவனின் சகோதரர் சுனிலை செல்போனில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கூடலூர் செக்போஸ்ட்டுக்கு வந்த சுனில் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அந்த கும்பலை போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க வைத்ததாக தெரிகிறது. எனவே கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் முன்கூட்டியே சுனிலுக்கு தெரியுமா? எப்படி, எதற்காக அந்த கும்பலை போலீசாரிடம் இருந்து விடுவித்தார்? கொடநாடு கொலை கொள்ளையில் தொடர்பு உடையவர்கள் பற்றி சுனிலுக்கு தெரியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனிப்படை போலீசார் சுனிலிடம் கேட்டு விசாரணை நடத்தினர். நேற்று மாலை 6 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

Related Stories: