சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு: அதிகாரிகள் தகவல்

சென்னை :  சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்த மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக  சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்கள் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சென்னையில் ஒரு சில மண்டலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ஒரே மண்டலத்தின் எல்லையில் வருவதால் நிர்வாக பிரச்னை ஏற்படுகிறது. அதன் காரணமாக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட திட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள் தொகை மற்றும் பரப்பளவு காரணமாக 2 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளது. சென்னையில் 15ல் இருந்து 23 மண்டலங்களாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. வடசென்னையில் 8 மண்டலங்களும், மத்திய சென்னையில் 8 மண்டலங்கள், தென் சென்னையில் 7 மண்டலங்கள் என மாற்றி அமைக்கப்பட உள்ளன.

அதன்படி வடசென்னையில் 1 முதல் 8 மண்டலங்களும், மத்திய சென்னையில் 9 முதல் 16 மண்டலங்களும் தென் சென்னையில் 16 முதல் 23 மண்டலங்களும் பிரிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இதில் புதிதாக கொளத்தூர், பெரம்பூர், ஹார்பர்  வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம்- மதுரவாயல், மயிலாப்பூர், வேளச்சேரி-  சோழிங்கநல்லூர்-  ஆலந்தூர் ஆகிய மண்டலங்கள் துவங்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது புதிதாக மண்டலங்கள் வந்தால் அதற்கு கட்டிடம் தேவை. அதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு கடந்த வாரம்  இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சென்னை மாநகராட்சியில் புதிய மண்டலங்கள் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: