வன்மமான அரசியல் நோக்கத்துடன் ஆளுநர் செயல்படுகிறார்: தமிழக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பதிலடி

சென்னை :  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு தீவிரவாதி கும்பல் என குற்றம் சாட்டிய ஆளுநர் கருத்துக்கு பதிலளித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா   மாநில தலைவர் முஹம்மத் ஷேக் அன்சாரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து தவறான கருத்துகளை  ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்கான சேவையில் முதன்மையாக இருந்த ஒரு அமைப்பு இந்த அமைப்பு. வன்மமான அரசியல் நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவருடைய நடவடிக்கைகள் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறைகளை பின்பற்றி அமைந்து இருக்கிறது.  தமிழக அரசின் மீது தவறான அபிப்ராயம் ஏற்படும் வகையில் அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன.  எங்கேயாவது எங்களுக்கு எதிரான குற்ற சாட்டுகள் இருந்தால்  நிரூபிக்கட்டும். எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி  தெரிவித்து வருகிறார்.

 நாங்கள் முகமூடி அணிந்து செயல்படுவதாகவும் அரசியல் லாபத்திற்காக வன்மத்தை தூண்டும் வகையில் நாங்கள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்து உள்ளார். நேர்மையான நபராக இருந்தால் ஆளுநர் யாரை குற்றம் சொல்லி இருக்க வேண்டும் என்றால், அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவுடன் செயல்படும் அமைப்புகள் மூலம் தெரிவித்து இருக்க வேண்டும்.இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். ஆளுநர் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும், நேர்மையான முறையில் செயல்பட வேண்டும், மக்கள் பிரச்னைகளை எடுத்து தீர்வு காண  வேண்டும். மக்கள் பிரச்னையை பேசாமல், பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு எது லாபமாக இருக்குமோ அதனை அவர் முன்னெடுத்து உள்ளார். அவரது விருந்தில் கூட, ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களையும், அயோத்தி வழக்கில் தொடர்புடையவர்களையும் வைத்துக்கொண்டு விருந்தளித்து வருகிறார். அவரை சுற்றி பாதுகாப்பு இருப்பதன் மூலமாக அவர் மீது எங்களால் நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுக்க முடியவில்லை, தமிழக அரசு ஜனநாயக முறையில் நேர்மையான முறையில் எதிர்வினையாற்ற வேண்டும்.இவ்வாறு பேசினார்.

Related Stories: