கடமலைக்குண்டு அருகே புதர்மண்டி கிடக்கும் பெரிய ஓடை-தூர்வார மக்கள் கோரிக்கை

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே புதர்மண்டி கிடக்கும் பெரிய ஓடை பகுதியை தூர்வார வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலைக்குண்டு அருகே பாலூத்து பெரிய ஓடை பகுதியில் அதிக அளவில்  நாணல் மற்றும் கருவேல மரங்கள் புதர் மண்டி காணப்படுகிறது.  இதனால் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் புதர் பகுதியில் மது, கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஓடை பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், தனியார் பிடியில் பெரிய ஓடை பகுதி சிக்கியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதர்களை அழிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், பல வருடங்களாக இந்த ஓடை புதர் பகுதியை அகற்ற வேண்டும், இப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பாக பல கிராமசபை கூட்டங்களில் புகார் தெரிவித்துவிட்டோம். இதுவரை அதிகாரிகள் செவிசாய்க்கவல்லை. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே புதர்களை அகற்றி மாணவர்கள், இளைஞர்கள் நலன் காக்க வேண்டும். இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: