ஊட்டியில் சிக்கன் ஷவர்மா கடைகளில் ஆய்வு

ஊட்டி : ஊட்டி நகரில் உள்ள சிக்கன் ஷவர்மா கடைகளில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழைய ஷவர்மாக்களை பறிமுதல் செய்தனர்.  

ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக ஊட்டி நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதற்கேற்ப ேகாடை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் ஷவர்மா உணவை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்கள், உணவகங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி பெட்டிகளுக்குள் ஷவர்மாக்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாங்கி உட்கொள்கின்றனர். ஊட்டியிலும் சில ஓட்டல்களில் கெட்டுபோன, பழைய கோழி இறைச்சி பயன்படுத்தி ஷவர்மா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பாரதியார் வளாகத்தில் உள்ள ஓட்டல்கள், கமர்சியல் சாலைகளில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, சில கடைகளில் மீந்து போன பழைய ஷவர்மாக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்து அழித்த அதிகாரிகள், ஒவ்வொரு நாளும் புதிதாக இறைச்சி வாங்கி பயன்படுத்த வேண்டும். மீந்து போன்ற இறைச்சியை மீண்டும் விற்பனைக்காக பயன்படுத்த கூடாது என எச்சரித்தனர்.

Related Stories: