1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடவில்லை: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4ம் அலை கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணியை தமிழக  அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பூசி போடும் வகையில், கிராம வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு,  பொது சுகாதாரத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி போடதவர்களின் பெயர், மொபைல் எண், தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்ட நாள், இரண்டாம் டோஸ் போட வேண்டிய நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாட்கள் ஆகியுள்ளன போன்ற விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கொண்டு கிராம வாரியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்படும். அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடுத்த அலை வருவதில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: