இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு குறித்த 12வது கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் நாடு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. முன்பெல்லாம் புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் முதல் ஆண்டு முழுவதும் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கும் அதற்கு நிதி ஒதுக்குவதற்கும் செலவிடுவார்கள். நான்காம் ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தலை எதிர்கொள்வது பற்றியே யோசிப்பார்கள். தேர்தலுக்கு பிறகு அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள், மீண்டும் முதலில் இருந்து இதேபோல் செயல்படுவதுதான் நமது நாட்டின் வழக்கமாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்தித்து செயல்படுகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் உலகிற்கு வழிகாட்டும் நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம். இந்தியா நம்பர் 1 நாடாக செயல்படுவதால் ஒரே பாரதம் உன்னத பாரதம் என பிரதமர் முழங்குகிறார். இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியா குறித்த பார்வையை உணர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய பெரியவர்கள் பலரும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘ஆய்வுகள் மூலம் பல தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மீன்வளப் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்றார்.

Related Stories: