என்.எல்.சி.க்கு நிலம் தந்தவர்களுக்கு நிவாரணம், வேலை வழங்க முதல்வர் முடிவு எடுப்பார்: அமைச்சர் சி.வீ.கணேசன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஜி.கே.மணி (பாமக), அருண்மொழி தேவன் (அதிமுக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), சபா ராஜேந்திரன் (திமுக), ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) ஆகியோர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிக்கு எடுக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் இருந்து யாரும் தேர்வு செய்யப்படாதது குறித்தும் வெளிமாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர். அதேபோல் சபாநாயகர் அப்பாவும், ‘என்னுடைய தொகுதியில் கூடங்குளத்திலும் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தான் கொடுக்கிறார்கள். எனவே ஒரு நல்ல முடிவை அமைச்சர் சொல்லுங்க’ என்றார்.

இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வீ.கணேசன் பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.க்கு நிலங்கள் கொடுத்தவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை பணிகள் வழங்கப்படவில்லை. இது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்படும். இது பற்றி என்.எல்.சி. நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டசபை முடிந்தவுடன் தொழில்துறை அமைச்சர், செயலாளர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத் துறை சார்ந்த செயலாளர் ஆகியோர் என்.எல்.சி. நிறுவன உயர் அதிகாரிகளை சென்னையில் உடனடியாக அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். கடலூரில் நிலம், வீடு இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பும் வழங்க முதல்வருடன் கலந்தாலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories: