கிரிப்டோ கரன்சியில் ரூ.1.44 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் வசீகரமான சமூக வலைதள விளம்பரங்களை நம்ப வேண்டாம்: போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் அவசர சுற்றறிக்கை

சென்னை: கிரிப்டோ கரன்சியில்  2 காவலர்கள் ரூ.1.44 கோடி முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்ததை தொடர்ந்து, இனி சமூக வலைதள விளம்பரங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் அவசர சுற்றறிக்கை மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், விடுபடவும் கூறப்பட்ட அறிவுரைகளை போலீசார் நீங்களும், உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நன்கு உணர்ந்து அறிவுரைகளை பின்பற்றி கடைபிடித்ததின் மூலமாக நம்மை நாமே கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொண்டோம். நாம் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டும், முகக்கவசம் அணிந்தும், கைகளை சுத்தம் செய்தும், தனிமனித இடைவெளியை கடைபிடித்ததின் மூலம்தான் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருந்தோம் என்பதில் ஐயமில்லை.

கடந்த 2 மாத காலமாக கொரோனா தொற்றின் பரவல் முற்றிலும் இல்லாத சூழ்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கொரோனா தொற்று பரவ தொடங்கியிருப்பது அறிக்கைகள் மூலம் தெரியவருகிறது. எனவே நாம் வரும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தும் 3வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களையும், தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நோய் தொற்றில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். கடந்த 10.9.2021 அன்று காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு தான் பணியின் மூலம் ஈட்டிய ஊதியம் மற்றும் சேமிப்புகளை இழந்து தன்னுடைய இன்னுயிரையும் நீர்த்துள்ளார்.  இதுபோன்ற தீய பழக்கங்களில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களை திசை திருப்பி கடின உழைப்பின் மூலம் பெற்ற ஊதியத்தையும் அதன் சேமிப்பையும் ‘கிரிப்டோ கரன்சி’ மற்றும் அதனை சார்ந்த பணமதிப்பு முதலீடுகளில் தங்களது சேமிப்பை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டவைகளை நம்பி அதில் முதலீடு செய்ய வைக்கின்றனர். சமீப காலமாக சில காவலர்கள் தங்களை இத்தகைய செயலில் ஈடுபட்டு பணியில் கவனமின்றி, பணம் மற்றும் சேமிப்பையும் இழந்து தனது இன்னுயிரையும் மாய்ந்துக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் குடும்பங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதரவற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

உதாரணமாக, நமது காவல்துறையில் பணிபுரியும் 2 காவலர்கள் மற்றும் அவர்களை சார்ந்த நபர்கள் டெலிகிராம், இதர சமூக வலைதளங்களின் மூலம் அனுப்பிய குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு ஆன்லைன் ‘பிட் காயன் டிரெடிங்க்’ உள்ளிட்ட நிறுவனத்தின் மூலம் கிரிப்டோ கரன்சியில் முறையே 20 லட்சத்து 67 ஆயிரத்து 139 ரூபாய் மற்றும் 1 கோடியே 24 லட்சம் என பல தவணையில் முறையில் முதலீடு செய்து தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்பதனை கூட அறியாமல் பெருந்தொகையை மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களை சிலர் இதுபோன்ற போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, மாவட்ட, சிறப்பு பிரிவு ஒருங்கிணைப்பு ஆய்வாளர்கள் தங்கள் மாவட்டத்தில், தனிப்பிரிவுகளில் பணிபுரியும் கடைநிலை காவலர்கள் வரை வழிகாட்டுதல்கள் அந்தந்த காவல் நிலைய வாட்ஸ் அப் குழு மூலமாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: