கொரோனா பாதிப்பால் 2 ஆண்டு கட்டுப்பாட்டுக்கு பிறகு தமிழகத்தில் ரம்ஜான் கோலாகல கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு; ஏழை, எளியோருக்கு பிரியாணி விருந்து அளித்தனர்

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் நண்பர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு பிரியாணி விருந்து அளித்தனர். இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின்போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி ரமலான் நோன்பு கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஷவ்வால்’ பிறை தென்படாததை தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

அதன்படி ரம்ஜான் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டி அணைத்து ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தனர். ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கினர்.

ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார். இதேபோல, சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

மயிலாப்பூர் ஜிம்மா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை நடத்த முடியாமல் ரமலான் பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடி வந்தோம். ஆனால், தமிழக அரசு எடுத்த சீரிய முயற்சியால் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வந்ததால் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் பள்ளிவாசலுக்கு சென்று ரமலான் கொண்டாடுவது நெகிழ்ச்சியாக உள்ளது. பல ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை திட்டங்களை இந்த ஓராண்டில் செய்து முடித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எப்போதும் சிறுபான்மை மக்களின் அரணாகவும் பாதுகாவலனாகவும் இருந்து வரும் தமிழக முதல்வருக்கு இஸ்லாமியப் பெருமக்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம். இரண்டு ஆண்டுகள் இல்லாத நிலை மாறி தற்போது சுமுக நிலைக்கு எடுத்து வந்த முதல்வரின் சீரிய நடவடிக்கையே இதற்கு காரணம். இந்த நன்னாளை இந்த முறை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் மகிழும் வகையில் அனைவருக்கும் விருந்தளித்து இந்த நாளை கொண்டாடினோம்’’ என்றார். தொழுகையை நிறைவு செய்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்த இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் வெளியே பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: