அரசு விடுமுறை தினம் எதிரொலி சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

ஊத்துக்கோட்டை: சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று அரசு விடுமுறை மற்றும் செவ்வாய் கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரி கிராமத்தில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்கு, வியாபார வளர்ச்சி, அரசியல் பதவி, ரியல் எஸ்டேட், திருமண தடை, குழந்தை பேறு போன்ற பல்வேறு தேவைகளுக்காக 6 செவ்வாய்கிழமைகளில் தொடர்ச்சியாக வந்து இங்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்நிலையில், நேற்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை மற்றும் அரசு விடுமுறை என்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்தனர். கோயிலின் முகப்புவாசல், காத்திருப்பு மண்டபம், விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தும் அரச மரம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதனால், குளக்கரை வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் காத்திருக்கும் மண்டபத்தில் இருந்து வரிசையில் சென்று சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் சாமி தரிசனம் முடித்து வெளியே சென்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் சித்திரை கிருத்திகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்  கூட்டமாக வந்து வழிபாட்டு சென்றனர். இதில், பெரும்பாலான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சென்றனர். இதனால் சிறுவாபுரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: