மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் சென்னைக்கு 242 தாழ்தள பேருந்து கொள்முதல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில், தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, மாநில அளவில் 2213 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில், சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பேருந்துகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ளபோதும், இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். எனவே, இந்த டெண்டர் நடவடிக்கைகளை தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: