பாதுகாப்பற்ற பாலியல் உறவால் முதல் கொரோனா ஊரடங்கில் 85,268 பேருக்கு எச்ஐவி பாதிப்பு: முதலிடத்தில் மகாராஷ்டிரா; தமிழகத்தில் 4,883 பேருக்கு உறுதி

சென்னை: ஊரடங்கால் பாலியல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாக, கடந்த 2020-21 ஆண்டில் 85,000க்கும் மேற்பட்டோருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ல் இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய பிறகு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த முதல் ஊரடங்கில், பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். பாலியல் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும், தொடர்ந்து நீடித்த ஊரடங்கால் தேவையற்ற கர்ப்பங்கள் அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் வெளியாகின. பாலியல் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், எச்ஐவி பாதிப்பு குறைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் 2020-21ல் முதல் ஊரடங்கு காலத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் சந்திரசேகர் கவுர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து அரசு சமர்ப்பித்த விவரங்களில் கூறியிருப்பதாவது: பாதுகாப்பற்ற பாலியல் உறவால் கடந்த 2020-21 ஆண்டில், அதாவது முதலாவது ஊரடங்கில் நாடு முழுவதும் 85,268 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 6,905 பேர், தெலங்கானாவில் 6,505 பேர், பீகாரில் 5,462 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதுபோல், தமிழகத்தில் 4,883, மத்திய பிரதேசத்தில் 3,037, பஞ்சாபில் 3,017, மேற்கு வங்கத்தில் 2,757, டெல்லியில் 2,463 பேருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது பாலியல் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எச்ஐவி பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

* எண்ணிக்கை மேலும் உயருமா?

ஊரடங்கின்போது சிலருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையில் எச்ஐவி கண்டறியப்பட்டது. இவர்கள் தவிர பலர் தங்களுக்கு எச்ஐவி வந்தது தெரியாமல் இருந்திருக்கக் கூடும். எனவே, ஊரடங்கு காலத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்தார்.

* தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவிய தொற்று

முதல் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட எச்ஐவி பாதிப்பில் சுமார் 300 குழந்தைகள். இவர்களுக்கு கர்ப்பகாலத்தில் தாயிடம் இருந்து எச்ஐவி பரவியது தெரிய வந்துள்ளது. இதிலும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 31 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஒடிசாவில் 24 பேர், ராஜஸ்தானில் 22, உத்தர பிரதேசத்தில் 21, மத்திய பிரதேசத்தில் 20, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 18, ஆந்திர பிரதேசத்தில் 15, மேற்கு வங்கத்தில் 13 மற்றும் பீகாரில் 10 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று உறுதியாகியுள்ளது.

2020-21ல் எச்ஐவி பாதிப்பு (மாநிலம் வாரியாக)

10,948 மகாராஷ்டிரா

9,521 ஆந்திரா

8,947 கர்நாடகா

4,883 தமிழ்நாடு

3,037 மத்திய பிரதேசம்

3,017 பஞ்சாப்

6,505 தெலங்கானா

5,462 பீகார்

6,905 உத்தர பிரதேசம்

2,757 மேற்கு வங்கம்

2,463 டெல்லி

Related Stories: