5ம் தேதி திருச்சியில் 39வது வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: விக்கிரமராஜா அறிக்கை

சென்னை: வரும் 5ம் தேதி திருச்சியில் நடைபெறும் 39 வது வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவுகளின்படி திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றிடும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான மே 5ம் தேதி நடத்திட ஆயத்த பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது.

மாநாட்டு அரங்கம் இந்திய அளவில் மிகப்பெரிய அரங்காக 52 ஏக்கர் நிலப்பரப்பளவில் உருவாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் வரும் மே 5ம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சியில் திரள இருக்கிறார்கள். மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வரை வணிகர்கள் அனைவரும் வரவேற்று, வணிகர்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வணிகர்கள் வரலாற்றில் புதிய மைல் கல்லையும் படைத்திட இருக்கிறார்கள்.

நடைபெற இருக்கும் 39வது மாநில மாநாடு, வணிக வரலாற்றின் ஒரு திருப்பு முனையாக அமையும் என்கிற உறுதியோடு, குடும்ப விழாவக கருதி, வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கிறார்கள். மாநாட்டில் பங்கேற்க இருக்கும் அனைவரும் மாநாட்டு அரங்கிலேயே காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேனீர் என அனைத்தும் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே 5 வணிகர்தின மாநாட்டிற்கு குறுகிய கால அவகாசமே இருக்கின்ற நிலையில், நிர்வாகிகள் அனைவரும் துரிதமாக செயல்பட்டு, மாநாட்டை வெற்றி மாநாடாக சிறப்பித்திட ஒத்துழைப்பை அளித்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: