ஊட்டி ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட மதுபாட்டில், பிளாஸ்டிக் சேகரிக்கும் மையம் செயல்பாட்டிற்கு வந்தது

ஊட்டி:  ஊட்டி  ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்  பொருட்கள் சேகரிக்கும் மையம் செயல்பாட்டிற்கு வந்தது.நீலகிரி  மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இவற்றில்  பெரும்பாலானவை கிராமப்புறங்களில் குடியிருப்பை ஒட்டியும், வனங்களை  ஒட்டியும் அமைந்துள்ளன. இந்த மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், அலுமினிய பாயில் பேப்பர்  கப்கள் போன்றவை தராளமாக விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் மதுப்பிரியர்கள் அவற்றை அருகில் சாலையோரங்கள், நடைபாதைகள், நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில்  விவசாய தோட்டங்களில் வைத்து மது அருந்துகின்றனர். பின்னர் பிளாஸ்டிக்  குப்பைகள் மதுபாட்டில்கள் போன்றவற்றை அப்படியே வீசி சென்று விடுகின்றனர்.  

இதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு  நீர்நிலைகளும் மாசடைந்து  வருகின்றன. வனங்களில் வீசி உடைந்து கிடக்கும் மதுபாட்டில்களை மிதித்து வனவிலங்குகள் காயம் அடைந்து உயிரிழக்கின்றன.இதனை தடுக்கும்  வகையில் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் பிளாஸ்டிக் மற்றும்  மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளன.ஊட்டி  நகரில் கூடலூர் சாலையில் ரயில் நிலையம் அருகில் இம்மையம்  திறக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சி மூலம் இம்மையத்தில் பணியாளர்  நியமிக்கப்பட்டு மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கும்  பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஊட்டி நகரில் சாலைகள், நடைபாதைகள்  மற்றும் முக்கிய இடங்களில் வீசி எறியப்படும் மதுபாட்டில்களும்  சேகரிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள்  மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை இம்மையத்தில் வழங்கி ஊட்டி நகரை தூய்மையாக  வைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஊட்டி நகராட்சி நிர்வாகம் கேட்டு  கொண்டுள்ளது.

Related Stories: