சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரம்..: மாணவர் தலைவர் உள்ளிட்ட 4 பேரை அழைத்து ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை

மதுரை: சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரத்தில் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் உள்ளிட்ட 4 பேரை அழைத்து ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமையன்று, முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்னவேல் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் மருத்துவ உடை அணிந்த பின்னர் ஹிப்போக்ரடிக் என ஆங்கில உறுதிமொழியை வாசிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக சபதம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.

இது பெரும் பேசும்பொருளாக தற்போது மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட சிலர் மீது மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுக்கலாம் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், கல்லூரி முதல்வரை கட்டாயக் காத்திருப்பில் வைத்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் ஆட்சியர் அனீஷ் சேகர் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: