விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் போலீஸ் தாக்கியதை நேரில் பார்த்த ஆட்டோ டிரைவருக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை:  விசாரணை கைதிவிக்னேஷ் மரண வழக்கில், போலீசார் தாக்கியதை நேரில் பார்த்த  ஆட்டோ டிரைவருக்கு சிபிசிஐடி  சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை கெல்லீஸ் சந்திப்பில் கடந்த 18ம் தேதி இரவு ஆட்டோவில் வந்த சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மடக்கி விசாரித்து, பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், விக்னேஷ் என்ற 25 வயது வாலிபர் 19ம் தேதி காலை உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரால் ஒருபுறம் நடத்தப்பட்டு வரும் நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிபிசிஐடி டி.எஸ்.பி சரவணன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்படும் ஆட்டோ டிரைவர் பிரபுவுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

பிரபுவின் ஆட்டோவில் தான் இருவரும் சென்றதாகவும், சம்பவத்தன்று போலீசார் இருவரையும் மடக்கி தாக்கியதாகவும் ஏற்கனவே பிரபு சொல்லியிருந்தார். அதனடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி எழும்பூர்  அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விக்னேஷின் சகோதரர் குற்றச்சாட்டு

உயிரிழந்த விக்னேஷுக்கு தாய், தந்தை என யாரும் இல்லை. இவருக்கு வினோத் உள்பட 5 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். குடும்பத்தில் விக்னேஷ் மூன்றாவது சகோதரர். மெரினாவில் குதிரை ஓட்டும் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், விக்னேஷின் மரணத்தை மறைக்க ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன்தாஸ், பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் தன்னையும், தனது தம்பிகளையும் காரில் அழைத்துச் சென்று பணம் கொடுத்து பேரம் பேசியதாகவும், மெரினாவில் கடை வாங்கித் தருவதாகவும் கூறியதாக வினோத் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: